The hindu 12/03/2014
“அப்பா, பூவெல்லாம்
எப்படிப்பா இருக்கும்?” என்று கேட்டாள் குழலி.
“பூவெல்லாம் அழகா இருக்கும்” என்றார் அப்பா.
“அப்படின்னா நம்ம வீட்டுப்
பூனைக்குட்டியும் பூவாப்பா?” என்று விடாமல் கேட்டாள் குழலி.
“பூவெல்லாம் வண்ணவண்ணமா இருக்கும்”
என்றார் அப்பா.
“அப்படின்னா வானவில்தான் பூவாப்பா?”
என்று கேட்டாள் குழலி.
பூக்கள் பூக்காத நாட்டில் உள்ள குழந்தைக்கு என்ன
பதில் சொல்ல முடியும் அந்த அப்பாவால்?
ஆம், குழந்தைகளே.
அந்த நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் திடீரென்று பூக்கள் பூக்கவில்லை.
இதனால் அப்போது குழந்தைகள் வருத்தப்பட்டார்கள். அவர்களுடைய கனவுகளில்கூட
விதவிதமாகப் பூக்கள் பூத்தன. அதுவரை பார்த்திராத பூக்களையெல்லாம் கனவுகளில்
அவர்கள் பார்த்தார்கள்.
அப்புறம் பிறந்த குழந்தை களுக்கெல்லாம் பூக்கள்
என்றால் என்னவென்றே தெரியவில்லை. பூக்கள் பூத்த காலத்தில் குழந்தைகளாக
இருந்தவர்கள் அப்போது சிறுவர்களாக வளர்ந்துவிட்டார்கள். புதிதாகப் பிறந்த
குழந்தைகளுக்குப் பூக்களைப் பற்றி அந்தச் சிறுவர்கள்தான் விளக்கமாகச் சொன்னார்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விளக்கினார்கள்.
பூக்களெல்லாம் செடிகளில் பூக்கும் பறவைகள் என்று ஒரு
சிறுமி சொன்னாள்.
பூக்களெல்லாம் தேவதைகளின் கனவுகள் என்று ஒரு சிறுவன்
சொன்னான்.
கடவுள் மனிதர்களை மகிழ்ச்சிப்படுத்த தினமும் பூக்கள்
வடிவத்தில்தான் பூமிக்கு வருவார் என்று இன்னொரு சிறுமி சொன்னாள்.
“கடவுளே, எங்களுக்குப்
பூக்களை மறுபடியும் கொடுங்கள்” என்று எல்லாக் குழந்தைகளும்
ஒன்றுசேர்ந்து கடவுளை வேண்டிக்கொண்டார்கள்.
ஒருநாள் குழந்தைகள் நிறையப் பேர் ஒன்றாக விளை
யாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது, வானத்திலிருந்து
ஒரு குரல் வந்தது.
“குழந்தைகளே, பயப்படா
தீங்க. மனுசங்களுக்குப் பூக்களோட மதிப்பும் இயற்கை யோட மதிப்பும் தெரியாமப் போனதால
எல்லாப் பூக்களயும் பூக்க விடாம நிப்பாட்டினேன். குழந்தைகள் நீங்கள்லாம் பூக்கள
இவ்வளவு நேசிக்கிறீங்க. அதனால நிச்சயம் மறுபடியும் பூக்கள் பூக்கும். ஒரு தேவதை
இந்த ஊருல பொறந்து பூக்கள உங்களுக்கு மீட்டுத்தருவா” என்று
அந்தக் குரல் சொன்னது.
அதே நேரத்தில் அந்த ஊரில் உள்ள ஏழை விவசாயி
ஒருவருக்கு அதிசயக் குழந்தை ஒன்று பிறந்தது. அதன் கண்கள் வைரம்போல் ஜொலித்தன.
குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் அந்த வீட்டின் மேலே
பறவைகள் கூட்டம் வந்துசேர்ந்தது. எல்லாப் பறவைகளும் அந்த வீட்டை வட்டமடித்தபடியே
இனிமையாகப் பாடின. காடுகளில் இருந்து கூட்டம் கூட்டமாக வந்த முயல்கள் எல்லாம்
கைகோத்து ஆடின. குழந்தையோ சிரித்துக்கொண்டே இருந்தது.
இந்த விஷயம் நாடு முழுவதும் பரவியது. பூக்களை
மீட்கப்போகும் தேவதை இவள் என்பது குழந்தைகளுக்குப் புரிந்தது. அந்த வீட்டை
நோக்கிக் குழந்தைகள் படையெடுத்தார்கள். அங்கே வந்து அந்த அதிசயக் காட்சியைக் கண்டு
மலைத்துப்போனார்கள்.
ஒரு கட்டிலின் மேல் அந்தக் குழந்தை நிலவைப் போல ஒளி
வீசிக்கொண்டிருந்தது. மேலே பறவைகள் பாடியபடி வட்டமடித்தன; கீழே முயல்கள் நடனமாடின. மேலிருந்து பறவைகளின் இறகுகள்
மழைபோல் பெய்தன.
“பூவெல்லாம் இப்படித்தான் இருக்கும்”
என்று ஒரு சிறுவன் கத்தினான்.
நாட்கள் செல்லச் செல்ல தேவதை வளர்ந்துகொண்டே வந்தாள்.
தன் பெண்ணை எண்ணி விவசாயிக்கு அளவற்ற மகிழ்ச்சி. தேவதை வந்த பிறகு குழந்தைகள்
எல்லாம் பூக்களை மறந்துபோனார்கள். இருந்தாலும் சிறுவர்கள் ஒரு சிலர் பூக்களைப்
பற்றிய நம்பிக்கையோடு இருந்தார்கள்.
தேவதை அவர்கள் எல்லோரையும் எல்லா விலங்குகளுக்கும்
நண்பர்களாக்கினாள். பறவைகளின் விசித்திர இருப்பிடங்களுக்கெல்லாம் எல்லோரையும்
அழைத்துச்சென்றாள்.
தேவதைக்குத் திருமண வயது வந்தது. விவசாயிக்குக் கவலை
வந்தது. அவளை ஒரு ராஜகுமாரனுக்கு மணமுடிக்க ஆசைப்பட்டார். குழந்தைகளுடன் தேவதையை
அதற்குப் பிறகு அனுப்ப மறுத்துவிட்டார். இதனால் குழந்தைகளுக்கும் தேவதைக்கும்
மிகுந்த வருத்தம்.
தேவதைக்கென்று ஒரு சுயம்வரத்தை விவசாயி ஏற்பாடு
செய்தார். தேவதையைப் பற்றிக் கேள்விப்பட்ட சூனியக்காரி ஒருத்தி அழகிய ராஜகுமாரனைப்
போல் உருவெடுத்து அந்த சுயம்வரத்துக்கு வந்தாள்.
தன்னுடைய மந்திரசக்தியால் ஏராளமான பொன் நகைகளையும்
வைரங்களையும் கொண்டுவந்து விவசாயியின் காலடியில் கொட்டினாள்.
சூனியக்காரியின் வலையில் விழுந்த விவசாயி திருமணத்துக்கு
நாள் குறித்தார். தேவதையும் குழந்தைகளும் பறவைகளும் சோகத்தில் ஆழ்ந்தார்கள்.
ஒரு நாள் சாயங்காலத்தில் தேவதை தன் வீட்டுத்
தோட்டத்துக்குச் சென்று ஒரு செடியிடம் நின்றாள். பல ஆண்டுகளாகப் பூக்காமல் இருந்தன
மொட்டுகள். ஒரு மொட்டுக்குப் புன்னகையுடன் முத்தம் கொடுத்தாள். மறுநாள் நாடெங்கும்
எல்லாச் செடிகொடிகளும் விதவிதமாகப் பூக்க ஆரம்பித்தன.
அதுவரைக்கும் பூக்களைக் கனவில் மட்டுமே
பார்த்துவந்திருந்த குழந்தைகள் இந்த அதிசயத்தைக் கொண்டாட ஆரம்பித்தனர்.
பெரியவர்களெல்லாம் இவைதாம் பூக்கள் என்று குழந்தைகளுக்குச் சொன்னார்கள்.
தங்களுக்குப் பூக்களை மீட்டுத்தந்தது தேவதையே என்பதை உணர்ந்த குழந்தைகள் தேவதையின்
வீட்டை நோக்கி ஓடிவந்தார்கள்.
அங்கே தேவதை இல்லை. எல்லா இடங்களிலும்
தேடிப்பார்த்தார்கள். தோட்டத்தில் சென்று தேடிப்பார்த்தார்கள் அங்கும் இல்லை.
ஆனால், ஒரு செடியின் ஒரு பூவிலிருந்து
மட்டும் ஒளி வீசிக்கொண்டு இருந்ததைக் குழந்தைகள் பார்த்தார்கள்.
தேவதைதான் அந்தப் பூவாக மாறியிருக்கிறாள் என்று
அந்தப் பூவுக்குத் தேவதைப் பூ என்று பெயர்வைத்தார்கள். பூக்கள் மறுபடியும்
கிடைத்தாலும் தேவதை போய்விட்டாளே என்று குழந்தைகள் அழுதார்கள். ஆனாலும், தங்களுடன் தேவதைப் பூ இருப்பதை நினைத்து ஆறுதல் அடைந்தார்கள்.
அதற்குப் பிறகு தினம் தினம் புதிது புதிதாகப் பூக்கள்
பூத்தன; உதிர்ந்தன. ஆனால், தேவதைப் பூ மட்டும் அதற்குப் பிறகு உதிரவே இல்லை. அதிலிருந்து ஒளிவீசுவது
நிற்கவும் இல்லை.
No comments:
Post a Comment