மதராஸிகளின் முதல் ஓட்டு
1937-ல்தான் முதல் முறையாகப் பெருமளவில், மக்கள் பங்கேற்ற பொதுத் தேர்தல் நடந்தது.
ஆந்திரத்திலிருந்து கன்னியாகுமரி வரையில் அன்றைய
சென்னை மாகாணம் விரிந்து பரவியிருந்தது. கர்நாடகத்தின் ஒரு பகுதியும், கேரளத்தின் ஒரு
பகுதியும் அன்றைய சென்னை மாகாணத்தில் இணைந்திருந்தன. முதல்முறையாக காங்கிரஸ் கட்சி
தேர்தலில் போட்டியிட்டதால், மக்களிடையே உற்சாகம் அதிகமாக இருந்தது.
1931 முதலே ஓட்டுக்க நாடகக் கலைஞர்களை சத்தியமூர்த்தி பயன்படுத்திவந்தார். கே.பி.
சுந்தராம்பாள், அவ்வை டி.கே. சண்முகம் அவர்களில் முக்கியமானவர்கள்.
கே.பி. சுந்தராம்பாள், முசிறி சுப்பிரமணிய ஐயர் பாடிய பாடல்களும் காங்கிரஸ்
கட்சியின் வேண்டுகோள்களும் தொகுக்கப்பட்டு, கிராமபோன் ரெகார்டாக தமிழ்நாடெங்கும் அக் காலத்தில்
வலம் வந்தன. காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு இப்படிக் கொடிகட்டிப் பறந்ததால்
மாற்றுக் கட்சியினர், தேர்தலில் போட்டியிடுவதற்குப் பதிலாகக் களத்திலிருந்தே விலகிவிடுவார்கள்.
வாக்குப்பதிவுக்கு முன்னதாக, பிப்ரவரி 14-ம் தேதி, என்.எஸ். வரதாச்சாரி என்ற காங்கிரஸ் வேட்பாளரை, திருவல்லிக்கேணியில்
சில குண்டர்கள் அடித்துவிட்டார்கள். தலையில்
கட்டுடன் என்.எஸ். வரதாச்சாரியார் காங்கிரஸ் ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கிச் சென்ற
செய்தியை ‘தி இந்து' படத்துடன் வெளியிட்டது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில், என்.எஸ்.
வரதாச்சாரி பட்ட அடி வீண் போகவில்லை என்பதை உணர்த்தின.