Wednesday, 27 May 2015

ஆணும் பெண்ணும் ஒரே உரையாடலை வெவ்வேறு விதமாக அர்த்தம் செய்துகொள்வதால்தான் குழப்பம் ஏற்படுகிறது.


ரயில் ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு எதிரேயிருந்த இருக்கையில் கணவனும் மனைவியும் அமர்ந் திருந்தனர். இரண்டு பேருக்கும் வயது நாற்பதுக்குள் இருக்கும். ஒரு இளைஞர் ‘காபி… காபி’ என்று குரல்கொடுத்தவாறு காபி டிரம்முடன் வந்தார்.
“காபி சாப்பிடுகிறீர்களா?’’ என்று மனைவி கேட்டார்.
“வேண்டாம்” என்று தலையசைத்தார் கணவர்.
உடனே கோபத்துடன் திரும்பி உட்கார்ந்துகொண்டார் மனைவி. அதைப் பார்த்த கணவர், இவள் எதற்கு முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டாள் என்று புரியாமல் விழித்தார்.
எனக்குப் புரிந்தது. மனைவி காபி குடிக்க விரும் பினார். எனக்குக் காபி வாங்கிக்கொடுங்கள் என்று நேரடியாகச் சொல்லத் தோன்றாமல், இருவரும் காபி குடிப்போம் எனப் பொருள்படும்படியாக, காபி சாப்பிடுகிறீர்களா என்று கணவரிடம் கேட்டார். அவருக்குத் தேவையில்லை என்றாலும், தனக்காக அவரும் சேர்ந்து குடிப்பார் என்று நினைத்திருப்பார். அல்லது உனக்கு வேண்டுமென்றால் குடி என்று பரிவாவது காட்டுவார் என்று எதிர்பார்த்திருக்கக்கூடும். இரண்டும் நடக்கவில்லை. அதனால் ஏமாற்றமும் எரிச்சலும் அடைந்தார்.
ஆணறியாப் பெண் மொழி
பெண் மொழியைப் புரிந்துகொள்ளும் திறமை கணவருக்கு இல்லை. மனைவியும், கணவர் தனக்குத் தான் வேண்டாம் என்று சொன்னார், நமக்கும் சேர்த்துச் சொல்லவில்லை என்பதைப் புரிந்துகொள்ளவில்லை. எனக்கு காபி வேண்டும் என்று அந்தப் பெண் கேட்டிருந் தால் நிச்சயம் கணவர் வாங்கித் தந்திருப்பார்.
ஒரே உரையாடலை ஆணும் பெண்ணும் வெவ் வேறு விதமாக அர்த்தம் செய்துகொள்வதால்தான் குடும்பங்களில் குழப்பம் ஏற்படுகிறது. அத்துடன் ஒரே விஷயத்தை அவர்கள் வெவ்வேறு பாணிகளில் சொல்கிறார்கள். அதன் காரணமாக, கணவன் சுயநலவாதி என்று மனைவியும், மனைவி அசட்டுப் பிடிவாதம் பிடிக்கிறாள் எனக் கணவனும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக்கொள்கிறார்கள்.
அமெரிக்க ஆய்வு
ஆண்களும் பெண்களும் பேசுகிறபோது வெவ்வேறு உரையாடல் விதிகளைப் பின்பற்றுகிறார்கள் என்று அமெரிக்க ஆய்வுக்குழு ஒன்று கண்டறிந்துள்ளது. இந்த உரையாடல் வேறுபாட்டை கணவன், மனைவி புரிந்துகொண்டுவிட்டால் குடும்பத்தில் சண்டையே வராது.
ஓர் ஆண் உரையாடுவதற்கு, எதிராளியைவிடத் தான் மேலானவன் என நிறுவுவதும், எதிராளி தன்னைவிட மேலானவன் அல்லன் என நிறுவுவதுமே முதன்மையான காரணங்கள். அவனுடைய பேச்சுகள் அந்த நோக்கிலேயே வெளிப்படும். ஆனால், பெரும்பாலான பெண்கள், எதிராளியுடன் சமத்துவத்தை நிறுவி - பரஸ்பரம் இசைந்த கருத்துகளையும் ஆதரவுகளையும் பரிமாறிக்கொள்கிற விதமாகவே பேசுகிறார்கள்.
கணவனும் மனைவியும் வெவ்வேறு ஊர்களில் பணியாற்ற வேண்டிய நிலை. அப்போது வேண்டப்பட்ட ஒருவர், “எப்படிச் சமாளிக்கிறீர்கள்... ரொம்பக் கஷ்டமாயிருக்குமே?” என்று கேட்டால், பெண் நன்றியுடன் அந்தப் பரிவையும் அனுதாபத்தையும் அங்கீகரித்து ஏற்றுக்கொள்வாள். ஆனால் அதையே ஆணிடம் சொன்னால், “அதில் என்ன கஷ்டம், இந்தக் காலத்தில் இரண்டு பேரும் சம்பாதித்தால்தான் குடும்பம் நடத்த முடியும். நான் வாரா வாரம் சனி, ஞாயிறுகளில் ஊருக்குச் சென்று விடுகிறேன். அவசர, அவசியத்துக்கு லீவு போட்டுவிட்டு குடும்பத்துக்கு உதவி செய்துவிட்டு வருவேன்” என்பான்.
அவர் சொல்வதெல்லாம் உண்மைதான். எல்லா ஆண்களுமே வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளவே விரும்புவார்கள். ஓர் ஆணிடம் போய், “நீயும் உன் மனைவியும் பிரிந்திருப்பது கஷ்டமாயில்லையா?” என்று யாராவது கேட்டால், அதில் ஓர் உள்ளர்த்தம் இருப்பதாக அவருக்குத் தோன்றுகிறது. “நீ திருமணம் செய்துகொண்டதில் அர்த்தமே இல்லை. என்னைப் பார், நானும் என் மனைவியும் ஒரே ஊரில் இருக்கிறோம். நான் உன்னைவிடச் சந்தோஷமாயிருக்கிறேன். ஆகவே, நான் உன்னைவிட மேலானவன்!” என்று குத்திக் காட்டுவதாகவே அவன் உணர்வான். “அப்படியில்லை, நான்தான் உன்னைவிட மேலானவன்” என்று நிறுவ முயற்சி செய்யத் தொடங்குவான்.
முடிச்சுகளால் இணைந்த உலகம்
உலகத்தை ஒரு வலையமைப்பாகவே பார்க்கிறார்கள் பெண்கள். வலையிலுள்ள ஒவ்வொரு முடிச்சும் அடுத்துள்ள முடிச்சுகளுடன் இணைந்திருப்பதைப் போலச் சக மனிதர்களும் ஒருவருக்கொருவர் பல வகையான உறவுகளால் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் எல்லோரும் இணக்கமாயிருந்தால்தான் வாழ்க்கை சீரானதாயிருக்கும் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உறவுகளும் நட்புகளும் தாங்கல்களும் முக்கியமானவை. உறவுகளின் நெருக்கத்தைப் பராமரிக்கவே பெண்கள் முயல்வார்கள். மகாபாரதத்தில்கூடப் பெண் பாத்திரங்கள் கடைசிவரை ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருக்கிறார்கள். ஆண்கள்தான் மற்றவருடன் ஒட்டாத சுயேச்சைத் தன்மையை அடைய முயல்கிறார்கள். இந்த வேறுபட்ட அணுகுமுறைகளும் கண்ணோட்டமும் ஒரே சந்தர்ப்ப சூழ்நிலையை ஆணும் பெண்ணும் வெவ்வேறுவிதமாகப் பார்க்க வைக்கின்றன.
ஒரு கணவன் தன் நண்பர்களிடம், “எதுக்கும் என் மனைவியின் கருத்தைக் கேட்டுவிடுகிறேன்” என்று வெளிப்படையாகச் சொல்ல வெட்கப்படுகிறான். ஆனால் மனைவி, “அய்யோ! அவரைக் கேட்காமல் ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போட மாட்டேன்!” என்று சொல்வதைப் பெருமையாக நினைக்கிறாள்.
இணக்கம் முக்கியம்
குடும்பத்தில் பேச்சுகளை - கோரிக்கை, ஆலோசனை, உத்தரவு என - மூன்று வகையாகப் பிரிக்கலாம். வீட்டுக்கு பெயின்ட் அடிக்க வேண்டும் என்பது கோரிக்கை. “என்ன நிற வண்ணம் பூசலாம், நீல வண்ணம் நல்லாயிருக்குமில்லையா?” என்பது ஆலோசனை. நீல வண்ணம்தான் அடிக்கணும் என்பது உத்தரவு. மூன்றுக்கும் நோக்கம் ஒன்றுதான். ஆனால், சில பெண்கள், கோரிக்கையை உத்தரவாகத் தப்பர்த்தம் கொண்டுவிடுவார்களோ என்று அஞ்சி, அதை ஆலோசனையைப் போல வெளியிடுவார்கள். “என்ன நிறம் வேண்டும் என்று நேரடியாகச் சொல்லிவிடு” என்று கணவர் சிடுசிடுப்பார். நீல வண்ணம்தான் அடிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டிருந்தால்கூட அவ்வளவு கோபம் வந்திருக்காது. பெரும்பாலான கணவர்கள் இதுபோன்ற சின்ன விஷயங்களில் மனைவிக்கு விட்டுக்கொடுத்துவிடுகிறார்கள். நிறத்தைவிடக் குடும்பத்தின் இணக்கம் அதிக முக்கியம் வாய்ந்தது என்பதே அவர்களுடைய கொள்கை.
பெரும்பாலான ஆண்களிடம் ஒரு பிரச்சினையைச் சொன்னால், அவர்கள் உடனே அதற்குத் தீர்வு காண முயல்வார்கள். “நான் ரொம்பக் குண்டாயிட்டேனா?’ என்று மனைவி கேட்டால் உடனே கணவன், “டாக்டரிடம் போய்ப் பரிசோதித்துக்கொள்கிறாயா?” என்று கேட்கிறார்.
மனைவிக்குக் கோபம் வருகிறது. ‘‘எதற்காக டாக்டரிடம் போகணும்? இது என்ன வியாதியா? நான் குண்டாயிருந்தால் உங்களுக்குப் பிடிக்காதா?” என்று சீறுகிறாள். கணவன் குழம்புகிறான். “நீ ஒன்றும் குண்டோடு சேர்த்தியில்லை, கொஞ்சம் பூசினாற்போல இருக்கிறாய், அவ்வளவுதான்” என்று அவன் சொல்லியிருக்க வேண்டும். “முன்னைவிட அழகு கூடியிருக்கிறது” என்றுகூடச் சேர்த்துக்கொண்டிருக்கலாம்.
பெண்களுக்கு மற்றவர்களுடன் பேசப் பிடிக்கும். தன் மனதிலிருப்பதை உரத்த சிந்தனையாகவாவது பக்கத்தில் இருப்பவர்களிடம் சொல்லிவிட வேண்டும். பேச விஷயமில்லாவிட்டால்கூட, “என்ன இப்படிப் புழுங்குகிறது!” என்று ஆரம்பிப்பார்கள். உடனே கணவன், “ஆமாமா, ரெண்டு நாளாகவே வெயில் அதிகம்தான்” என்று ஏதாவது பதிலைச் சொல்லிவிட்டு, தான் செய்துகொண்டிருக்கும் வேலையைத் தொடர வேண்டும். பல ஆண்கள், உரையாடல் என்பது உருப்படியான தகவல் பரிமாற்றமாக மட்டுமே இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். மனதில் தோன்றுவதையெல்லாம் வெளியில் சொல்லிக்கொண்டிருப்பது அவசியமில்லை, “புழுங்குகிறது என்பது எல்லோருக்கும் தெரிகிறதே, அதை வாய்விட்டுச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமா” என்று அவர்கள் சும்மாயிருந்துவிடுவார்கள்.
- கே.என். ராமசந்திரன், பேராசிரியர் (ஓய்வு).
The tamil hindu 21.5.2015

Tuesday, 12 May 2015

தமிழர்களுக்கு பிடித்தாலும் பிடிக்கும். (இவ்வளவு திரட்ட பெரும் முயற்சி வேண்டும் செய்திருக்கிறார்கள்)

கி.மு 14 பில்லியன்
பெரும் வெடியில் உலகம் தோன்றியது.
கி.மு 6 - 4 பில்லியன்
பூமியின் தோற்றம்.
கி.மு. 2.5 பில்லியன்
நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.
கி.மு. 470000
இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.
கி.மு. 360000
முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கி.மு. 300000
யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.
கி.மு. 100000
நியாண்டெர்தல் மனிதன்
கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.
கி.மு. 75000
கடைசி பனிக்காலம.். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.
கி.மு. 50000
தமிழ்மொழியின் தோற்றம்.
கி.மு. 50000 - 35000
தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.
கி.மு. 35000 - 20000
ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.
கி-மு. 20000 - 10000
ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )
கி-மு. 10527
முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.
கி.மு. 10527 - 6100
பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.
கி.மு. 10000
கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.
கி.மு. 6087
கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.
கி.மு 6000 - 3000
கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.
கி.மு. 5000
உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.
கி.மு. 4000
சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.
கி.மு - 4000
கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.
கி.மு - 3200
சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.
கி.மு - 3113
அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.
கி.மு - 3102
சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.
மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்
இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.
கி.மு - 3100 - 3000
ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.
கி.மு - 2600
எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.
கி.மு - 2387
இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.
கி.மு - 2000 - 1000
காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.
கி.மு - 1915
திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.
கி.மு. - 1900
வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.
கி.மு. 1500
முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
கி.மு. - 1450
உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.
கி.மு. - 1316
மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.
கி. மு. 1250
மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.
கி. மு . 1200
ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.
கி. மு. 1000
உலக மக்கள் தொகை 50 மில்லியன்.
கி. மு. 1000-600
வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.
கி. மு. 950
அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.
கி. மு. 950
வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.
கி. மு. 925
யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.
கி. மு. 900
இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.
கி. மு. 850பின்
இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.
கி. மு. 776
கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.
குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி. பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது) சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)
கி. மு. 750
பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.
கி. மு. 700
சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.
கி. மு. 623- 543
கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.
கி. மு. 600
லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.
கி. மு. 600
கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.
கி. மு. 599 - 527
மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.
கி. மு. 560
பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.
கி. மு. 551-478
கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.
கி. மு. 500
கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.
கி. மு. 478
இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.
கி. மு. 450
ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.
கி. மு. 428 - 348
சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.
கி. மு. 400
கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.
கி. மு. 350 - 328
உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)
கி. மு. 328 - 270
மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)
கி. மு. 326
அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.
கி. மு. 305
சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.
கி. மு. 302
சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.
கி. மு. 300
சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.
கி. மு. 300
கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.
கி.மு. 273-232
மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.
கி.மு. 270-245
சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.
கி.மு. 251
புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்
கி.மு. 245-220
சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.
கி.மு. 221
புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.
கி.மு. 220 - 200
கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.
கி.மு. 220-180
குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.
கி.மு. 200
முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.
கி.மு. 200
தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.
கி.மு. 125-87
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.
கி.மு. 87-62
செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி
கி.மு. 62-42
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)
கி.மு. 42-25
பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.
கி.மு. 31
உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.
கி.மு. 25-9
இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.
கி.மு. 9-1
கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்

Monday, 4 May 2015

சந்தோஷப்படுகிறேன்

பவளவிழா காணும் பிபிசி தமிழோசை

பிபிசி உலக சேவையின் மூத்த மொழிப்பிரிவுகளில் ஒன்றான பிபிசி தமிழோசை தொடங்கி இன்றோடு (03-05-2015) 74 ஆண்டுகள் முடிந்து, 75வது ஆண்டு தொடங்குகிறது.
பிரிட்டனின் காலனிய ஆட்சிக்காலத்தின் இறுதிக்கட்டம் மற்றும் இரண்டாம் உலகப்போரின் உச்சகட்டத்தில் தொடங்கப்பட்ட இந்திய துணைக்கண்டத்தின் மொழிப்பிரிவுகளில் ஒன்றான பிபிசி தமிழோசை தனது நீண்ட பயணத்தில் பல முக்கிய வரலாற்று நிகழ்வுகளின் ஒலி சாட்சியாக இருந்திருக்கிறது.
காலவெள்ளத்தில் 75 ஆண்டுகள் என்பது ஒரு துளியாக இருக்கலாம். ஆனால் ஒரு ஒலிபரப்பு நிறுவனத்தின் வாழ்க்கையில் அது ஒரு பெரும் பகுதி.
கடிதமாக கருவாகி செய்தியாக கிளைபரப்பி.....
பிபிசி தமிழோசை தொடங்கப்பட்டது 1941 மே மாதம் 3 ஆம் தேதி என்றாலும் அதற்கு பிபிசி தமிழோசை என்கிற பெயர், அது தொடங்கி சில ஆண்டுகளுக்குப் பின்னரே சூட்டப்பட்டது. இதன் பின்னணியை பிபிசி தமிழோசைக்கு வழங்கிய பேட்டியொன்றில் தமிழோசையின் முன்னோடி ஆசிரியர்களில் ஒருவரான சிவபாதசுந்தரம் பின்வருமாறு தெரிவித்திருந்தார்.
"பிபிசி தமிழோசை யுத்தகாலத்தில் ஆரம்பித்தபோது இலங்கை கடிதம் என்று ஒரு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியை எழுதிப் படித்தவர் தம்பு என்பவராவர். அவர் இலங்கைக்காரர். ஆனால் இந்திய சிவில் சர்விஸ் சேவையில் சென்னையில் கலெக்டராக பணியாற்றியவர். அவர் தான் அந்த இலங்கை கடிதத்தை எழுதிப் படித்தவர். இரண்டாவது உலகயுத்தம் முடிவடைந்த பின்னர் 1947ஆம் ஆண்டு தமிழ் ஒலிபரப்பை சஞ்சிகை நிகழ்ச்சியாக விரிவுபடுத்தும் நோக்குடன் பிபிசி என்னை (சிவபாதசுந்தரத்தை) அழைத்தது. 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நான் பிபிசிக்கு வந்தேன். 1948ஆம் ஆண்டு ஒரு முறையான சஞ்சிகை நிகழ்ச்சியாக இதை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக ஒரு முறையான முகப்பிசையை உருவாக்கி, இலங்கைக் கடிதம் என்று இருந்ததை உலகக் கடிதமாக, உலக நிகழ்ச்சியாக நடத்துவதற்கு ஏற்பாடாகி, 1948 ஆம் ஆண்டு தான் தமிழ் நிகழ்ச்சிக்கு தமிழோசை என்கிற பெயர் ஏற்பாடாயிற்று” என்று தெரிவித்தார் சோ.சிவபாதசுந்தரம்.
பிபிசி தமிழோசையின் துவக்ககால முகப்பிசை மறைந்த இசைக்கலைஞர் டி.பி.ஜெயராமையர் அவர்களால் தயாரிக்கப்பட்டு தமிழோசையில் கே.பி.ரங்காச்சாரி காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1999ஆம் ஆண்டு வரையிலுமே கூட அந்த இசைதான் பிபிசி தமிழோசையின் முகப்பிசையாக இருந்தது.
பிபிசி தமிழின் இணைய முத்திரை/இலச்சினை
ஆரம்ப காலகட்டங்களில் வாரமொருமுறையாகவும் பின்னர் வாரமிரு முறையாகவும் ஒலிபரப்பான பிபிசி தமிழோசை, பின்னர் செய்தி மற்றும் நடப்புச் செய்திகள் என்று பரிணமித்தது.
1980களில் தமிழோசை செய்தி மற்றும் சித்திரங்கள், வானொலி நாடகங்கள் என மலர்ந்த காலம். அதுவே பிபிசி தமிழோசையின் பல மூத்த நேயர்கள் இன்றும் நினைவுகூறும் காலமாகவும் இருந்துவருகிறது.
சங்கரண்ணா என்று பிபிசி தமிழோசை நேயர்களால் அன்போடு அழைக்கப்பட்ட சங்கரமூர்த்தி, பிபிசி தமிழோசையின் பொறுப்பாளராக இருந்த அந்தக்காலத்தில்தான் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பல பிபிசி தமிழோசையில் மொழிப்பெயர்ப்பாகி அரங்கேறின.
தேம்சு நதிக்கரையில் இருந்து சங்கரமூர்த்தியின் கணீர்க்குரலில் ஒலித்த அந்த தமிழோசை சிற்றலை மூலமாகவே ஒலிபரப்பாகி வந்தாலும், பல லட்சக்கணக்கான நேயர்களின் பாசத்துக்குரிய ஓசையாக இருந்து வந்தது.
இலங்கை, இந்தியா, உலகம் என்று விரிந்து......
சஞ்சிகை வடிவ நிகழ்ச்சி என்றாலும், இந்திய இலங்கை அரசியல் பிரமுகர்கள், கலைஉலகப்பிரமுகர்கள் என பலரின் குரல்களும் தமிழோசையில் ஒலித்தன.
இலங்கைப்போர் 1980களின் தொடக்கத்தில் பெரிய அளவில் வெடித்தபோது, பிபிசி தமிழோசையின் கவனம் பெருமளவு இலங்கைப் பிரச்சனையின்மீது திரும்பியது.
இலங்கை இனப்பிரச்சனையின் பல்வேறு அரசியல் பரிமாணங்களை தொடர்ந்து ஆராய்ந்து வந்த பிபிசி தமிழோசை பல முறை இலங்கை அரசியலில் முக்கிய பங்காற்றிய தலைவர்கள் பலரையும் பேட்டி எடுத்தது.
தமிழக முன்னாள் முதல்வர்கள் மு கருணாநிதி, எம்.ஜி.ஆர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பல தமிழ் அரசியல் தலைவர்களின் பிரத்யேக பேட்டிகள் பிபிசி தமிழோசையில் இடம்பெற்றிருந்தன.
இலங்கை மோதலின் பக்கசார்பற்ற சாட்சியமாய் நீடித்து....
இலங்கைப்போர் 1990களில் உச்சமடைந்து யாழ்ப்பாணத்திலும், பின்னர் வன்னியிலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, அவர்களுக்கு துல்லியமான, பக்கசார்பற்ற செய்திகளை வழங்கி முக்கிய பங்காற்றியது பிபிசி தமிழோசை.
பின்னர் 2002ஆம் ஆண்டிலிருந்து சில ஆண்டுகள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தபோது, நாட்டில் ஏற்பட்ட தற்காலிக அமைதியையும், பின்னர் அந்த ஒப்பந்தம் ஏட்டளவில் நின்று மோதல்கள் மீண்டும் வெடித்தபோது, மக்கள் பட்ட துயரங்களையும் தொடர்ந்து பதிவு செய்து வந்தது தமிழோசை.
இலங்கைப்போரின் இறுதிக்கட்டங்களில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் போர்ப்பகுதிகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், போர் முனையில் இருந்த மக்கள் மற்றும் அரச மருத்துவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு போர் குறித்த செய்திகளை உள்ளூர் மக்களுக்கு மட்டுமின்றி புலம்பெயர் தமிழர்களுக்கும் அறியத் தந்தது பிபிசி தமிழோசை.
போர்க்காலத்தில் இலங்கையில் கடும் ஒலிபரப்பு நெருக்கடிக்கு ஆளான தமிழோசை, தனது பண்பலை ஒலிபரப்பை சிறிது காலம் நிறுத்தி வைக்க நேரிட்டது. தற்போது அது இலங்கை நேயர்களுக்கு ஐந்து நிமிட உலகச் செய்தியறிக்கையை ஷக்தி எப்.எம் வானொலி மூலம் வழங்கி வருகிறது.
தொழில்நுட்பத் துணையோடு இணையத்தில் நுழைந்து, தொலைக்காட்சியாய் தொடரும் தமிழோசை......
இலங்கைப் போர் முடிந்த கால கட்டம்தொழில்நுட்பத்திலும் பெரும் மாற்றங்கள் உருவாகி வந்த காலம். இணையத்தில் ஏற்கனவே புத்தாயிரத்தின் முதல் பத்தாண்டுகளில் தடம்பதித்த பிபிசி தமிழோசை, மெல்ல மெல்ல வளர்ந்து, பேஸ்புக், ட்விட்டர், கூகுள் ப்ளஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களிலும் தனது முத்திரையை பதிக்கத் தொடங்கி அந்த ஊடகங்களிலும் புதிய, இளைய நேயர்களைப் பெற்றிருக்கிறது.
பவளவிழா காணும் பிபிசி தமிழ் தொலைக்காட்சியிலும் செய்திகளை வழங்குகிறது
இதன் இணையதளச் செய்திகள் இப்போது சென்னையிலிருந்து வெளிவரும் ஹிந்து நாளேட்டின் தமிழ்ப் பதிப்பிலும் இடம்பெறுகின்றன.
பிபிசி தமிழோசையின் வரலாற்றில் 2015ஆம் ஆண்டு மற்றும் ஒரு மைல்கல். இதுவரை வானொலி மற்றும் இணையதளம் என்ற இரு ஊடகங்களில் மட்டுமே செயல்பட்டுவந்த பிபிசி தமிழோசை, இப்போது தொலைக்காட்சி மூலமும் புதிய நேயர்களை ஈர்க்க ஆரம்பித்திருக்கிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியன்று தொடங்கப்பட்ட பிபிசி தமிழ்த் தொலைக்காட்சி, இந்தியாவின் தந்தி தொலைக்காட்சி மூலம் உலகச் செய்திகளை 10 நிமிட நேரம் தமிழக மற்றும் இணையதளம் மூலம் உலக நேயர்களுக்கும் வழங்கி வருகிறது.
பிபிசி தமிழோசை தனது வரலாற்றில் பெரும் மாற்றங்களைக் கண்டிருக்கிறது. காலத்தின் போக்குக்கேற்ப, தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கும், நேயர்களின் தேவைகளுக்கும் ஏற்ப பிபிசி தமிழோசை தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு மாறி, இந்த அளவு வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. நேயர்களின் ஆதரவோடு பிபிசி தமிழோசை மென்மேலும் வளர்ந்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு தனது செய்திச்சேவையைத் தொடரும்.