ஆனந்த விகடன் 11/9/2013
இது கருணா‘நிதி’ கதை
அன்று 1 லட்சம்... இன்று 93 கோடி..!
'தமிழக முதல்வர்’ பதவி என்பது, எத்தனை சக்தி
வாய்ந்தது; அதை வைத்து ஏழை - எளிய மக்களுக்கு எவ்வளவோ நல்லது செய்யலாம் என்பதை ஒருநாள்
முதல்வராக செயல்பட்டு உணர்த்துவார் சாமான்யரான 'முதல்வன்’ அர்ஜுன்!
வில்லனால் பழிவாங்கப்பட்டு சொத்துக்கள் அனைத்தையும் இழந்த 'சிவாஜி’ ரஜினி, ஒற்றை ரூபாயைச்
சுண்டி, இழந்ததைவிடவும் அதிகப்படியான சொத்துக்களைச் சம்பாதிப்பார்.
இந்த இரண்டும் ரீலில் சாத்தியம். ரியலில்? 'இதுவும் சாத்தியம்... இதற்கு மேலும் சாத்தியம்’ என்பதை தனிநபராக
நிரூபித்திருக்கிறார் கருணாநிதி.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மூர்க்கமாகப்
பங்கெடுத்தது, இடஒதுக்கீட்டைச் சாத்தியப்படுத்தியது, உழவர் சந்தைத் திட்டம், தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து என, கருணாநிதியின்
அரசியல் புரட்சிகள் நாடறியும். ஆனால், அவரது தனிநபர் வருமான விவரங்கள் குறித்து தெரியுமா?
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் திரட்டப்பட்ட அவரது சொத்து விவரம்குறித்த
புள்ளிவிவரத்தின் ஒன்லைன் இதோ...
1967-ம் வருடம் கருணாநிதி காட்டிய சொத்து மதிப்பு 1 லட்சத்து 8 ஆயிரம். அப்போது
குடும்பத்தில் அவர் மட்டுமே சம்பாதிக்கும் திறன் கொண்ட நபர். சமீபத்தில் பல்வேறு
சமயங்களில் தெரிவிக்கப்பட்ட விவரங்களின்படி அழகிரி, ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தினரின்
ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 92.88 கோடி ரூபாய் மட்டுமே!
கருணாநிதியின் 'முதல்வன்’ பாணி அரசியல் பயணம் அனைவரும் அறிந்ததுதான். 'சிவாஜி’ பாணி பெர்சனல் பயணம்? கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்...
தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களின் சொத்துக் கணக்கை வேட்புமனுவோடு கட்டாயம்
காட்டியாக வேண்டும் என்ற விதி, 10 ஆண்டுகளுக்கு முன்புதான் தொடங்கியது. ஆனால், இந்தியாவிலேயே
முதன்முறையாக எம்.எல்.ஏ-க்கள் ஒவ்வோர் ஆண்டும் தங்களின் சொத்துக் கணக்கை காட்ட
வேண்டும் என்ற முன்னோடியை உருவாக்கியது தமிழகம்தான். 'அரசியலில்
நேர்மை... பொதுவாழ்வில் தூய்மை’ என்பது கரைந்துகொண்டிருந்த காலகட்டத்தில் அண்ணாவின்
மறைவுக்குப் பிறகு 1969-ல் முதல்வர் நாற்காலியில் முதன்முறையாக அமர்ந்த கருணாநிதி, சட்டமன்ற
உறுப்பினர்கள் தங்களின் சொத்துக் கணக்கை அவசியம் வெளியிட வேண்டும் என்ற
தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட முதல் ஆண்டில்
(தீர்மானம், முன்தேதியிட்டு கொண்டுவரப்பட்டது) 165 எம்.எல்.ஏ-கள் தங்களின் சொத்துக் கணக்குகளை
சட்டசபைக்கு அளித்தார்கள். அதன் பிறகு 'கழுதை-கட்டெறும்பு’ கதையாக அந்த எண்ணிக்கை தேய்ந்து மறைந்தே போய்விட்டது.
தீர்மானம் கொண்டுவந்த கருணாநிதியே முதல் ஏழு வருடங்களுக்குப் பிறகு, கடந்த 2006-ம் ஆண்டு வரை தன்
சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை.
அந்தத் தீர்மானத்தின்படி 1967-ம் வருடம்
கருணாநிதி அளித்த சொத்துக் கணக்கு இது.
கோபாலபுரம் நான்காவது தெருவில் 7ஏ எண்ணில் இருந்த வீட்டை 1955-ம் ஆண்டில் 35 ஆயிரம் ரூபாய்க்கு
வாங்கியவர், அந்த வீட்டை மேம்படுத்த 1966-ம் ஆண்டு வரையில் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்திருக்கிறார். அப்போது
அவருடைய இந்தியன் வங்கிக் கையிருப்பு 11,103 ரூபாய். தஞ்சை அகரதிருநல்லூரில் 14.26 ஏக்கர் நஞ்சையும், 1.85 ஏக்கர் புஞ்சையும், 0.94 ஏக்கர் காலி இடமும், காட்டூரில் 0.50 ஏக்கர் நஞ்சையும், 1.88 ஏக்கர் புஞ்சையும்
இருப்பதாகச் சொல்லியிருக்கிறார் கருணாநிதி. இந்த நிலங்கள் அனைத்தையும் 1953-ம் ஆண்டு 23,500 ரூபாய்க்கு
வாங்கியிருக்கிறார். 1966-ல் 20 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய அம்பாஸடர் (எம்.எஸ்.ஆர். 1335) கார். இவைதான் 1967-ல் கருணாநிதியிடம்
இருந்த சொத்து.
1968-ல் தாக்கல் செய்த கணக்கில், சென்னை கோபாலபுரம்
நான்காவது தெருவில் எண்: 2 என்ற வீட்டை 50 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிஇருப்பதாகக் கணக்கு காட்டியிருக்கிறார். அம்பாஸடர்
காரை விற்று, அதன் மூலம் கிடைத்த 5 ஆயிரம் ரூபாயும், மேகலா பிக்சர்ஸில் வாங்கிய கடன் 45 ஆயிரம் ரூபாயும் சேர்த்து அந்த வீட்டை வாங்கியதாகக் குறிப்பிட்டு
இருக்கிறார். அப்போது இந்தியன் வங்கிக் கையிருப்பு 1,150 ரூபாய்.
1969-ம் வருடக் கணக்கில் கோபாலபுரம் நான்காவது தெருவில்
உள்ள 2-ம் எண் வீட்டைத் தன் மகன் மு.க.முத்துவுக்கு பரிசாகக் கொடுத்துவிட்டதாகத்
தெரிவித்திருக்கும் கருணாநிதியின் அப்போதைய வங்கிக் கையிருப்பு 3,142 ரூபாய்.
1970 கணக்கில் தனது சம்பளப் பணத்தை வைத்து திருக்குவளையில்
ஓட்டு வீட்டையும் அதையட்டி 21 சென்ட் புஞ்சை நிலத்தையும் 1,000 ரூபாய்க்கு
வாங்கியிருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார். அப்போதைய வங்கிக் கையிருப்பு 4,411 ரூபாய்.
1971 கணக்கில் வங்கிக் கையிருப்பு 1,305 ரூபாய். மகன்
அழகிரிக்காக 3,700 ரூபாய்க்கு ஸ்கூட்டர் வாங்கியிருக்கிறார். 1972 கணக்கில் வங்கிக் கையிருப்பு 3,394 ரூபாய்.
இதன் பிறகு 2006-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில்தான் தன் சொத்துக் கணக்கைத் தாக்கல்
செய்திருக்கிறார் கருணாநிதி. (அப்போது அது கட்டாயம்!). அப்போது அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு
26.58 கோடி ரூபாய். (2001-2006 ஐந்தாண்டு காலத்தில் எம்.எல்.ஏ. என்ற முறையில் கருணாநிதி பெற்ற சம்பளம் 3,83,810 ரூபாய்!)
கடந்த 2011 சட்டசபைத் தேர்தலின்போது கருணாநிதி தாக்கல்செய்த சொத்துக் கணக்கின்படி, அஞ்சுகம் பதிப்பக
நிறுவனப் பங்குகள், அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டடம் மற்றும் நிலம், திருவாரூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் 14.30 ஏக்கர் நிலம்
ஆகியவற்றை உள்ளடக்கி கணக்குக் காட்டினார்.
தயாளு பெயரில் கலைஞர் 'டி.வி.’ நிறுவனத்தின் பங்குதாரர் என்ற வகையில் 15 கோடியே 39 லட்சத்து 85 ஆயிரத்து 363 ரூபாய், ராசாத்தி பெயரில் அசையும் சொத்துக்கள் 20.62 கோடி ரூபாய், அசையாச்
சொத்துக்கள் 3.08 கோடி ரூபாய். கருணாநிதி, தயாளு அம்மாள், ராசாத்தி அம்மாள் ஆகிய மூவரின் ஒட்டுமொத்த சொத்து
மதிப்பாக 44.15 கோடி ரூபாய்க்குக் கணக்கு காட்டப்பட்டிருக்கிறது!
முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ. சம்பளம் போக சினிமா கதை-வசன வருவாய் மற்றும்
தனியார் சேனல் முதலீடுகள் ஆகியவையே கருணாநிதியின் சொத்துக்கள் பெருக்கத்துக்குக்
காரணம். தமிழகத்தின் தலைவராக தன் கடமைகளை நிறைவேற்றிய கருணாநிதி, தன் குடும்பத்தின்
தலைவராகவும் தன் பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்றியிருக்கிறார்!
டெயில் பீஸ்: 1967-ம் வருடம் கருணாநிதி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்
சொத்துக் கணக்கை வெளியிடுவது தொடர்பான தீர்மா னத்தை சட்டமன்றத்தில் தாக்கல்
செய்யும்போது, ''பொது நலனுக்காகவேயன்றி நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ தங்கள் நலம்
பெறுவதற்காக சட்டமன்ற உறுப்பினர்கள், அந்தப் பதவிகளை வகிக்கவில்லை என்று மக்கள் நம்பிக்கை
கொள்ளவேண்டும். இந்த நோக்கத்துக்காகத்தான் 'சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்துக் கணக்குகளை
வெளியிடுதல்’ தொடர்பான அரசினர் தீர்மானம் கொண்டுவந்திருக்கிறோம்'' என்று
முன்மொழிந்தார்!
அழகிரி, ஸ்டாலின், கனிமொழி..?
2009 நாடாளுமன்றத் தேர்தலில் மு.க.அழகிரி காட்டிய சொத்து
மதிப்பு 19.43 கோடி ரூபாய். அழகிரி, மனைவி காந்தி, மகன் தயாநிதி ஆகியோரின் பெயர்களில் வங்கி மற்றும் மற்ற நிறுவனங்களில் முதலீடு, நகைகள், கார்கள், தயா சைபர் பார்க், ராயல் கேபிள் விஷன், தயா டையக்னோஸ்டிக்
நிறுவனம், மதுரை காந்தி சில்க்ஸ், தயா திருமண மண்டபம், பண்ணை வீடு, வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், மதுரை, சென்னை, கொடைக்கானல் போன்ற இடங்களில் உள்ள நிலங்கள், மனைகள் எல்லாம்
சேர்த்து அழகிரி குடும்பத்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 19 கோடியே 43 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்.
கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் காட்டிய சொத்து மதிப்பு 2.63 கோடி ரூபாய். 2008 ராஜ்யசபா தேர்தலில்
கனிமொழி போட்டியிட்டபோது காட்டிய சொத்து மதிப்பு 8.56 கோடி ரூபாய். சமீபத்தில் 2013 ராஜ்யசபா தேர்தலில்
போட்டியிட்டபோது அவர் அளித்த சொத்து மதிப்பு 26.67 கோடி ரூபாய்.