Sunday, 22 September 2013

கட்டபொம்மன். கிஸ்தி கட்டவில்லை என்பது கப்ஸா'

ஜெ.ராஜா முகமது என்பவர் எழுதிய, "புதுக்கோட்டை மாவட்ட வரலாறு' என்ற நூல்
கப்பத்தொகை, 16 ஆயிரத்து, 550 பகோடா, மே 31, 1798 வரை, பாக்கி இருப்பதாகவும், அத்தொகையை, உடனடியாக கட்டும்படி, மதுரை கலெக்டராக இருந்த ஜாக்சன், கட்டபொம்மனுக்கு எச்சரிக்கை கடிதம், அனுப்பி வைத்தார். ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், பாக்கியை செலுத்தவில்லை கட்டபொம்மன். இதனால், பாஞ்சாலக் குறிச்சியின் மீது, படையெடுக்க விரும்பினார் ஜாக்சன். அப்போது, ஆங்கிலேய படை, திப்பு சுல்தானுடன் போரில் ஈடுபட்டிருந்ததால், இதற்கு உடன்படவில்லை; மாறாக, கட்டபொம்மனை, ராமநாதபுரத்துக்கு அழைத்து பேசுமாறு பணித்தது.
இதன்படி, தன்னை, ராமநாதபுரத்தில், ஆக., 18, 1798ல், சந்திக்கும்படி கட்டபொம்மனுக்கு கடிதம் எழுதினார் ஜாக்சன். இந்த கட்டளையை அனுப்பி விட்டு, திருநெல்வேலி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள, ராமநாதபுரத்திலிருந்து புறப்பட்டார் ஜாக்சன். கட்டபொம்மன், தன் பரிவாரங்களுடன், ஜாக்சனை சந்திக்கச் சென்றார். ஆக., 27, 1798ல், குற்றாலத்தை ஜாக்சன் அடைந்தபோது, கட்டபொம்மனும், அவரது பரிவாரங்களும் ஜாக்சனுக்காக காத்திருந்தனர். கட்டபொம்மனை அங்கு சந்திக்க மறுத்து விட்டார் ஜாக்சன்.

பின், சொக்கம்பட்டி, சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற இடங்களிலும் சந்திக்க முயன்று, தோற்று, பயணம் துவங்கி, 23 நாட்கள் கழித்து, 640 கி.மீ., அலைந்து, செப்., 19, 1798ல், ராமநாதபுரத்தில், ஜாக்சனை சந்தித்தார் கட்டபொம்மன். கிஸ்தி கணக்கை சரி பார்த்த போது, ஐயாயிரம் ரூபாய் (180 பகோடா) மட்டுமே பாக்கி இருப்பதை கண்டு கொண்டார் ஜாக்சன். ஆகவே, மே 31, 1798க்கும், செப்., 31, 1798க்கும் இடைப்பட்ட மூன்று மாத காலத்தில், கட்டபொம்மன், 11 ஆயிரம் ரூபாய் கிஸ்தி பண பாக்கியை கட்டி விட்டதாக அறிகிறோம்.
அகந்தை கொண்ட ஜாக்சன், மேற்படி சந்திப்பின் போது, கட்ட பொம்மனையும், அவர்களது அமைச்சர்களையும் மூன்று மணி நேரம், நிற்க வைத்தே, விசாரணை செய்தார். சந்திப்பின் இறுதியில், ராமநாதபுரம் கோட்டையிலேயே, அவர்கள் தங்கியிருக்க வேண்டும் என்று, உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, ஏற்பட்ட கைகலப்பில், கட்டபொம்மன் தப்பிக்கும் முயற்சியில், லெப்டினென்ட் கிளார்க் என்பவர் கொல்லப்பட்டார். கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்ரமணிய பிள்ளை கைது செய்யப்பட்டார். கட்டபொம்மன், தப்பித்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்குப் பின், சென்னை கவர்னருக்கு மேல் முறையீட்டு கடிதம் ஒன்றை அனுப்பினார் கட்டபொம்மன். கவர்னருக்கு அனுப்பிய கடிதத்தில், தான், கலெக்டரின் கட்டளைக்கு மதிப்பளித்து, அவரைச் சந்திக்க, பாக்கி இருந்த கிஸ்தி பணத்தையும், ராமநாதபுரத்துக்கு எடுத்துச் சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட, கைகலப்பிற்கு, ஜாக்சனின் நடவடிக்கைகளே காரணம் எனவும், குறிப்பிட்டிருந்தார்.
கடிதத்தைக் கண்ட கவர்னர் கிளைவ், தற்காலிகமாக, ஜாக்சனை பதவி நீக்கம் செய்தும், சிவசுப்ர மணியப் பிள்ளையை விடுதலை செய்ய ஆணை பிறப்பித்தார்.

அத்துடன், ராமநாதபுரம் நிகழ்ச்சிகளை குறித்து விசாரணை நடத்த, வில்லியம் பிரவுன், வில்லியம் ஆரம், ஜான் காசா மேஜர் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவையும் நியமித்தார். இக்குழுவின் விசாரணையில், (டிச.,15, 1798) ராமநாதபுரத்தில், கட்டபொம்மனை, ஜாக்சன் நடத்திய விதம், ஏளனத்துக்குரியது என்று, தெரிய வந்தது. 


விசாரணைக் குழுவின் முடிவு ஏற்கபட்டு, பதவியில் இருந்து ஜாக்சன் நீக்கப்பட்டார்; அவரது இடத்தில், கலெக்டராக லூசிங்டன் நியமிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment