நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் நான்மணிக்கடிகை எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார்.
கடவுள் வாழ்த்து
| மதி மன்னும் மாயவன் வாள் முகம் ஒக்கும்; கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்; முது நீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின் எதிர் மலர் மற்று அவன் கண் ஒக்கும்; பூவைப் புது மலர் ஒக்கும், நிறம். |
| படியை மடியகத்து இட்டான்; அடியினான் முக் கால் கடந்தான் முழுநிலம்; அக் காலத்து ஆன் நிரை தாங்கிய, குன்று எடுத்தான்; - சோவின் அருமை அழித்த மகன். |
நூல்
| எள்ளற்க, என்றும் எளியர் என்று! என் பெறினும் கொள்ளற்க, கொள்ளார் கை மேற்பட! உள் சுடினும் சீறற்க, சிற்றில் பிறந்தாரை! கூறற்க, கூறல்லவற்றை விரைந்து! | 1 |
| பறை பட வாழா, அசுணமா; உள்ளம் குறை பட வாழார், உரவோர்; நிறை வனத்து நெல் பட்டகண்ணே வெதிர் சாம்; தனக்கு ஒவ்வாச் சொல் பட்டால், சாவதாம் சால்பு. | 2 |
| மண்ணி அறிப, மணி நலம்; பண் அமைத்து ஏறியபின் அறிப, மா நலம்; மாசு அறச் சுட்டு அறிப, பொன்னின் நலம் காண்பார்; கெட்டு அறிப கேளிரான் ஆய பயன். | 3 |
| கள்ளி வயிற்று இன் அகில் பிறக்கும்; மான் வயிற்று ஒள் அரிதாரம் பிறக்கும்; பெருங் கடலுள் பல் விலைய முத்தம் பிறக்கும்; அறிவார் யார், நல் ஆள் பிறக்கும் குடி? | 4 |
| கல்லில் பிறக்கும், கதிர் மணி; காதலி சொல்லில் பிறக்கும், உயர் மதம் - மெல்லென் அருளில் பிறக்கும், அற நெறி, எல்லாம் பொருளில் பிறந்துவிடும். | 5 |
| திரு ஒக்கும், தீது இல் ஒழுக்கம்; பெரிய அறன் ஒக்கும், ஆற்றின் ஒழுகல்; பிறனைக் கொலை ஒக்கும், கொண்டு கண்மாறல்; புலை ஒக்கும், போற்றாதார் முன்னர்ச் செலவு. | 6 |
| 'கள்வம்!' என்பார்க்கும் துயில் இல்லை; காதலி மாட்டு உள்ளம் வைப்பார்க்கும் துயில் இல்லை; 'ஒண் பொருள் செய்வம்!' என்பார்க்கும் துயில் இல்லை; அப் பொருள் காப்பார்க்கும் இல்லை, துயில். | 7 |
| கற்றார்முன் தோன்றா, கழிவு இரக்கம்; காதலித்து ஒன்று உற்றார்முன் தோன்றா, உறா முதல்; தெற்றென அல்ல புரிந்தார்க்கு அறம் தோன்றா; எல்லாம் வெகுண்டார் முன் தோன்றா கெடும். | 8 |
| நிலத்துக்கு அணி என்ப, நெல்லும் கரும்பும்; குளத்துக்கு அணி என்ப தாமரை; பெண்மை நலத்துக்கு அணி என்ப, நாணம்; தனக்கு அணி தான் செல் உலகத்து அறம். | 9 |
| கந்தில் பிணிப்பர், களிற்றை; கதம் தவிர, மந்திரத்தினால் பிணிப்பர், மா நாகம்; கொந்தி, இரும்பின் பிணிப்பர், கயத்தை; சான்றோரை நயத்தின் பிணித்துவிடல்! | 10 |
| கன்றாமை வேண்டும், கடிய; பிறர் செய்த நன்றியை நன்றாக் கொளல் வேண்டும் - என்றும் விடல்வேண்டும், தன்கண் வெகுளி; அடல்வேண்டும், ஆக்கம் சிதைக்கும் வினை. | 11 |
| பல்லினான் நோய் செய்யும் பாம்பு எல்லாம்; கொல் களிறு கோட்டான் நோய் செய்யும், குறித்தாரை; ஊடி, முகத்தான் நோய் செய்வர், மகளிர்; முனிவர் தவத்தின் தருக்குவர், நோய். | 12 |
| பறை நன்று, பண் அமையா யாழின் நிறை நின்ற பெண் நன்று, பீடு இலா மாந்தரின்; பண் அழிந்து ஆர்தலின் நன்று, பசித்தல்; பசைந்தாரின் தீர்தலின் தீப் புகுதல் நன்று. | 13 |
| வளப் பாத்தியுள் வளரும், வண்மை; கிளைக் குழாம் இன் சொற் குழியுள் இனிது எழூஉம்; வன் சொல், கரவு எழூஉம், கண் இல் குழியுள்; இரவு எழூஉம், இன்மைக் குழியுள் விரைந்து. | 14 |
| இன்னாமை வேண்டின், இரவு எழுக! இந் நிலத்து மன்னுதல் வேண்டின், இசை நடுக! தன்னொடு செல்வது வேண்டின், அறம் செய்க! வெல்வது வேண்டின், வெகுளி விடல்! | 15 |
| கடற் குட்டம் போழ்வர், கலவர்; படைக் குட்டம் பாய்மா உடையான் உடைக்கிற்கும்; தோம் இல் தவக் குட்டம் தன்னுடையான் நீந்தும்; அவைக் குட்டம் கற்றான் கடந்துவிடும். | 16 |
| பொய்த்தல் இறுவாய, நட்புக்கண்; மெய்த்தாக முத்தல் இறுவாய்த்து, இள நலம்; தூக்கு இல் மிகுதி இறுவாய, செல்வங்கள்; தம் தம் தகுதி இறுவாய்த்து, உயிர். | 17 |
| மனைக்கு ஆக்கம் மாண்ட மகளிர்; ஒருவன் வினைக்கு ஆக்கம் செவ்வியன் ஆதல்; சினச் செவ் வேல், நாட்டு ஆக்கம் நல்லன் இவ் வேந்து என்றல்; கேட்டு ஆக்கம் கேளிர் ஒரீஇவிடல். | 18 |
| பெற்றான் அதிர்ப்பின், பிணை அன்னாள் தான் அதிர்க்கும்; கற்றான் அதிர்ப்பின், பொருள் அதிர்க்கும்; பற்றிய மண் அதிர்ப்பின், மன்னவன் கோல் அதிர்க்கும்; பண் அதிர்ப்பின், பாடல் அதிர்ந்துவிடும். | 19 |
| மனைக்குப் பாழ், வாணுதல் இன்மை; தான் செல்லும் திசைக்குப் பாழ், நட்டோ ரை இன்மை; இருந்த அவைக்குப் பாழ், மூத்தோரை இன்மை; தனக்குப் பாழ், கற்று அறிவு இல்லா உடம்பு. | 20 |
| மொய் சிதைக்கும், ஒற்றுமை இன்மை; ஒருவனைப் பொய் சிதைக்கும், பொன் போலும் மேனியை; பெய்த கலம் சிதைக்கும், பாலின் சுவையை; குலம் சிதைக்கும், கூடார்கண் கூடிவிடின். | 21 |
| புகழ் செய்யும், பொய்யா விளக்கம்; இகழ்ந்து ஒருவன் பேணாமை செய்வது பேதைமை; காணாக் குருடராச் செய்வது மம்மர்; இருள் தீர்ந்த கண்ணராச் செய்வது, கற்பு. | 22 |
| மலைப்பினும், வாரணம் தாங்கும்; குழவி, அலைப்பினும், 'அன்னே!' என்று ஓடும்; சிலைப்பினும், நட்டார் நடுங்கும் வினை செய்யார்; ஒட்டார் உடன் உறையும் காலமும் இல். | 23 |
| நசை நலம் நட்டார்கண் நந்தும்; சிறந்த அவை நலம் அன்பின் விளங்கும்; விசை மாண்ட தேர் நலம் பாகனால் பாடு எய்தும்; ஊர் நலம் உள்ளானால் உள்ளப்படும். | 24 |
| அஞ்சாமை அஞ்சுக! ஒன்றின், தனக்கு ஒத்த எஞ்சாமை, எஞ்சும் அளவு எல்லாம்! நெஞ்சு அறியக் கோடாமை, கோடி பொருள் பெறினும்! நாடாமை, நட்டார்கண் விட்ட வினை! | 25 |
| கோல் நோக்கி வாழும், குடி எல்லாம்; தாய் முலையின் பால் நோக்கி வாழும், குழவிகள்; வானத் துளி நோக்கி வாழும், உலகம்; உலகின் விளி நோக்கி இன்புறூஉம், கூற்று. | 26 |
| கற்ப, கழி மடம் அஃகும்; மடம் அஃக, புற்கம் தீர்ந்து, இவ் உலகில் கோள் உணரும்; கோள் உணர்ந்தால், தத்துவம் ஆன நெறி படரும்; அந் நெறியே இப்பால் உலகத்து இசை நிறீஇ, உப்பால் உயர்ந்த உலகம் புகும். | 27 |
| குழித்துழி நிற்பது நீர்; தன்னைப் பல்லோர் பழித்துழி நிற்பது பாவம்; - அழித்துச் செறுவழி நிற்பது காமம்; தனக்கு ஒன்று உறுவுழி நிற்பது அறிவு. | 28 |
| திருவின் திறல் உடையது இல்லை, ஒருவற்கு; கற்றலின் வாய்த்த பிற இல்லை; எற்றுள்ளும் இன்மையின் இன்னாதது இல்லை; 'இலம்!' என்னும் வன்மையின் வன்பாட்டது இல். | 29 |
| புகை வித்தாப் பொங்கு அழல் தோன்றும் சிறந்த நகை வித்தாத் தோன்றும் உவகை; பகை, ஒருவன் முன்னம் வித்து ஆக முளைக்கும்; முளைத்தபின் இன்னா வித்து ஆகிவிடும். | 30 |
| பிணி அன்னர் பின் நோக்காப் பெண்டிர்; உலகிற்கு அணி அன்னர், அன்புடைய மக்கள்; பிணி பயிலும் புல் அன்னர், புல் அறிவின் ஆடவர் கல் அன்னர், வல்லென்ற நெஞ்சத்தவர். | 31 |
| அந்தணரின் மிக்க பிறப்பு இல்லை; என் செயினும், தாயின் சிறந்த தமர் இல்லை; யாதும் வளமையோடு ஒக்கும் வனப்பு இல்லை; எண்ணின், இளமையோடு ஒப்பதூஉம் இல். | 32 |
| இரும்பின் இரும்பு இடை போழ்ப; பெருஞ் சிறப்பின் நீர் உண்டார் நீரான் வாய் பூசுப; - தேரின், அரிய அரியவற்றால் கொள்ப; பெரிய பெரியரான் எய்தப்படும். | 33 |
| மறக் களி மன்னர் முன் தோன்றும்; சிறந்த அறக் களி இல்லாதார்க்கு ஈயும் முன் தோன்றும்; வியக் களி நல்கூர்ந்தார் மேற்றாம்; கயக் களி ஊரில் பிளிற்றிவிடும். | 34 |
| மையால் தளிர்க்கும், மலர்க்கண்கள்; மால் இருள், நெய்யால் தளிர்க்கும், நிமிர் சுடர்; பெய்ய முழங்கத் தளிர்க்கும், குருகிலை; நட்டார் வழங்கத் தளிர்க்குமாம், மேல். | 35 |
| நகை இனிது, நட்டார் நடுவண்; பொருளின் தொகை இனிது, தொட்டு வழங்கின்; தகை உடைய பெண் இனிது, பேணி வழிபடின்; பண் இனிது பாடல் உணர்வாரகத்து. | 36 |
| கரப்பவர்க்குச் செல்சார் கவிழ்தல்; எஞ் ஞான்றும் இரப்பவர்க்குச் செல்சார் ஒன்று ஈவோர்; பரப்பு அமைந்த தானைக்குச் செல்சார் தறுகண்மை; ஊன் உண்டல் செய்யாமை, செல்சார் உயிர்க்கு. | 37 |
| கண்டதே செய்பவாம், கம்மியர்; உண்டு எனக் கேட்டதே செய்ப, புலன் ஆள்வார்; வேட்ட இனியவே செய்ப, அமைந்தார்; முனியாதார் முன்னியவே செய்யும், திரு. | 38 |
| திருவும் திணை வகையான் நில்லா; பெரு வலிக் கூற்றமும் கூறுவ செய்து உண்ணாது; ஆற்ற மறைக்க மறையாதாம், காமம்; முறையும் இறை வகையான் நின்றுவிடும். | 39 |
| பிறக்குங்கால் 'பேர்' எனவும் பேரா; இறக்குங்கால், 'நில்' எனவும் நில்லா; - உயிர் எனைத்தும் நல்லாள் உடம்படின், தானே பெருகும்; கெடும் பொழுதில், கண்டனவும் காணா கெடும். | 40 |
| போர் அறின், வாடும், பொருநர் சீர்; கீழ் வீழ்ந்த வேர் அறின், வாடும் மரம் எல்லாம்; நீர் பாய் மடை அறின், நீள் நெய்தல் வாடும்; படை அறின் மன்னர் சீர் வாடிவிடும். | 41 |
| ஏதிலார் என்பார் இயல்பு இல்லார்; யார் யார்க்கும் காதலார் என்பார் தகவு உடையார்; மேதக்க தந்தை எனப்படுவான் தன் உவாத்தி; தாய் என்பாள் முந்து தான் செய்த வினை. | 42 |
| பொறி கெடும், நாண் அற்ற போழ்தே; நெறிப்பட்ட ஐவரால் தானே வினை கெடும்; பொய்யா நலம் கெடும், நீர் அற்ற பைங் கூழ்; நலம் மாறின், நண்பினார் நண்பு கெடும். | 43 |
| நன்றி சாம் நன்று அறியாதார் முன்னர்; சென்ற விருந்தும் விரும்பு இலார் முன் சாம்; அரும் புணர்ப்பின் பாடல் சாம், பண் அறியாதார் முன்னர்; ஊடல் சாம் ஊடல் உணராரகத்து. | 44 |
| நாற்றம் உரைக்கும், மலர் உண்மை; கூறிய மாற்றம் உரைக்கும், வினை நலம்; தூக்கின், அகம் பொதிந்த தீமை மனம் உரைக்கும்; முன்னம் முகம் போல முன் உரைப்பது இல். | 45 |
| மழை இன்றி மாநிலத்தார்க்கு இல்லை; மழையும் தவம் இலார் இல்வழி இல்லை; தவமும் அரசு இலார் இல்வழி இல்லை; அரசனும் இல் வாழ்வார் இல்வழி இல். | 46 |
| போதினான் நந்தும், புனை தண் தார்; மற்று அதன் தாதினான் நந்தும், சுரும்பு எல்லாம்; தீது இல் வினையினான் நந்துவர், மக்களும்; தம்தம் நனையினான் நந்தும், நறா. | 47 |
| சிறந்தார்க்கு அரிய, செறுதல்; எஞ் ஞான்றும் பிறந்தார்க்கு அரிய, துணை துறந்து வாழ்தல்; வரைந்தார்க்கு அரிய வகுத்து ஊண்; இரத்தார்க்கு ஒன்று 'இல்' என்றல் யார்க்கும் அரிது. | 48 |
| இரை சுடும், இன்புறா யாக்கையுள் பட்டால்; உரை சுடும், ஒண்மை இலாரை; வரை கொள்ளா முன்னை ஒருவன் வினை சுடும்; வேந்தனையும், தன் அடைத்த சேனை சுடும். | 49 |
| எள்ளற்பொருளது, இகழ்தல்; ஒருவனை உள்ளற்பொருளது, உறுதிச் சொல்; உள் அறிந்து சேர்தற்பொருளது, அற நெறி; பல் நூலும் தேர்தற்பொருள, பொருள். | 50 |
| யாறு உள் அடங்கும் குளம் உள; வீறு சால் மன்னர் விழையும் குடி உள; தொல் மரபின் வேதம் உறுவன பாட்டு உள; வேளாண்மை வேள்வியோடு ஒப்ப உள. | 51 |
| எருது உடையான் வேளாளன்; ஏலாதான் பார்ப்பான், ஒரு தொடையான் வெல்வது கோழி; உருவோடு அறிவு உடையாள் இல்வாழ்க்கைப் பெண் என்ப; சேனைச் செறிவு உடையான் சேனாபதி. | 52 |
| யானை உடையார் கதன் உவப்பர்; மன்னர் கடும் பரி மாக் காதலித்து ஊர்வர்; கொடுங் குழை நல்லாரை நல்லவர் நாண் உவப்பர்; அல்லாரை அல்லார் உவப்பது கேடு. | 53 |
| கண்ணின் சிறந்த உறுப்பு இல்லை; கொண்டானின் துன்னிய கேளிர் பிறர் இல்லை; மக்களின் ஒண்மைய வாய் சான்ற பொருள் இல்லை; ஈன்றாளின் என்ன கடவுளும் இல். | 54 |
| கற்றன்னர், கற்றாரைக் காதலர்; கண்ணோடார் செற்றன்னர்; செற்றாரைச் சேர்ந்தவர், தெற்றென உற்றது உரையாதார்; உள் கரந்து பாம்பு உறையும் புற்ற அன்னர், புல்லறிவினார். | 55 |
| மாண்டவர் மாண்ட வினை பெறுப; வேண்டாதார் வேண்டா வினையும் பெறுபவே; யாண்டும், பிறப்பால் பிறப்பார் அறன் இன்புறுவர்; துறப்பார், துறக்கத்தவர். | 56 |
| என்றும் உளவாகும், நாளும், இரு சுடரும்; என்றும், பிணியும், தொழில் ஒக்கும்; என்றும் கொடுப்பாரும் கொள்வாரும் அன்னர்; பிறப்பாரும் சாவாரும் என்றும் உளர். | 57 |
| இனிது உண்பான் என்பான் உயிர் கொல்லாது உண்பான்; முனிதக்கான் என்பான் முகன் ஒழிந்து வாழ்வான்; தனியன் எனப்படுவான் செய்த நன்று இல்லான்; இனியன் எனப்படுவான் யார் யார்க்கேயானும் முனியா ஒழுக்கத்தவன். | 58 |
| ஈத்து உண்பான் என்பான் இசை நடுவான்; மற்ற அவன் கைத்து உண்பான் காங்கி எனப்படுவான்; தெற்ற நகை ஆகும் நண்ணார் முன் சேறல்; பகை ஆகும், பாடு அறியாதானை இரவு. | 59 |
| நெய் விதிர்ப்ப, நந்தும், நெருப்பு அழல்; சேர்ந்து வழுத்த, வரம் கொடுப்பர், நாகர்; தொழுத் திறந்து கன்று ஊட்ட, நந்தும், கறவை; கலம் பரப்பி நன்று ஊட்ட, நந்தும், விருந்து. | 60 |
| பழி இன்மை மக்களால் காண்க! ஒருவன் கெழி இன்மை கேட்டால் அறிக! பொருளின் நிகழ்ச்சியான், ஆக்கம் அறிக! புகழ்ச்சியான், போற்றாதார் போற்றப்படும். | 61 |
| கண்ணுள்ளும் காண்புழிக் காதற்றாம்; பெண்ணுள் உரு இன்றி மாண்ட உளவாம்; ஒருவழி, நாட்டுள்ளும் நல்ல பதி உள; பாட்டுள்ளும் பாடு எய்தும் பாட்டே உள. | 62 |
| திரி அழல் காணின், தொழுப; விறகின் எரி அழல் காணின், இகழ்ப; ஒரு குடியில் கல்லாது மூத்தானைக் கைவிட்டு, கற்றான் இளமை பாராட்டும், உலகு. | 63 |
| கைத்து உடையான் காமுற்றது உண்டாகும்; வித்தின் முளைக் குழாம் நீர் உண்டேல், உண்டாம்; திருக் குழாம் ஒண் செய்யாள் பார்த்துறின், உண்டாகும்; மற்ற அவள் துன்புறுவாள் ஆகின், கெடும். | 64 |
| ஊன் உண்டு உழுவை நிறம் பெறூஉம்; நீர் நிலத்துப் புல்லினான் இன்புறூஉம், காலேயம்; நெல்லின் அரிசியான் இன்புறூஉம், கீழ் எல்லாம்; தம்தம் வரிசையான் இன்புறூஉம், மேல். | 65 |
| பின்னவாம் பின் அதிர்க்கும் செய்வினை; என் பெறினும் முன்னவாம், முன்னம் அறிந்தார்கட்கு; என்னும் அவா ஆம், அடைந்தார்கட்கு உள்ளம்; தவாவாம், அவா இல்லார் செய்யும் வினை. | 66 |
| கைத்து இல்லார் நல்லவர், கைத்து உண்டாய்க் காப்பாரின்; வைத்தாரின் நல்லர், வறியவர்; பைத்து எழுந்து வைதாரின் நல்லர், பொறுப்பவர்; செய்தாரின் நல்லர் சிதையாதவர். | 67 |
| மகன் உரைக்கும், தந்தை நலத்தை; ஒருவன் முகன் உரைக்கும், உள் நின்ற வேட்கை; அகல் நீணர்ப் புலத்து இயல்பு புக்கான் உரைக்கும்; நிலத்து இயல்பு வானம் உரைத்துவிடும். | 68 |
| பதி நன்று, பல்லார் உறையின்; ஒருவன் மதி நன்று, மாசு அறக் கற்பின்; நுதி மருப்பின் ஏற்றான் வீறு எய்தும், இன நிரை; தான் கொடுக்கும் சோற்றான் வீறு எய்தும், குடி. | 69 |
| ஊர்ந்தான் வகைய, கலின மா; நேர்ந்து ஒருவன் ஆற்றல் வகைய, அறம் செயல்; தோட்ட குளத்து அனைய, தூம்பின் அகலங்கள்; தம்தம் வளத்த அனைய, வாழ்வார் வழக்கு. | 70 |
| ஊழியம் யாண்டு எண்ணி யாத்தன; யாமமும் நாழிகையானே நடந்தன; தாழீயா, தெற்றென்றார்கண்ணே தெளிந்தனர்; வெட்கென்றார் வெஞ் சொலால் இன்புறுவார். | 71 |
| கற்றான் தளரின் எழுந்திருக்கும் கல்லாத பேதையான் வீழ்வானேல், கால் முரியும்; எல்லாம் ஒருமைத் தான் செய்த கருவி; தெரியின், மெய் பொய்யா வித்து ஆகிவிடும். | 72 |
| தேவர் அனையர், புலவரும்; தேவர் தமர் அனையர், ஒர் ஊர் உறைவார்; தமருள்ளும் பெற்றன்னர், பேணி வழிபடுவார்; கற்றன்னர், கற்றாரைக் காதலவர். | 73 |
| தூர்ந்து ஒழியும், பொய் பிறந்த போழ்தே; மருத்துவன், 'சொல்' என்ற போழ்தே, பிணி, உரைக்கும்; - நல்லார், 'விடுக!' என்ற போழ்தே விடுக! அதற்கு உரியான், 'தா' எனின், தாயம் வகுத்து! | 74 |
| நாக்கின் அறிப இனியவை மூக்கினான் மோந்து அறிப, எல்லா மலர்களும்; நோக்குள்ளும் கண்ணினான் காண்ப, அணியவற்றை; தொக்கு இருந்து, எண்ணினான் எண்ணப்படும். | 75 |
| சாவாத இல்லை, பிறந்த உயிர் எல்லாம்; தாவாத இல்லை, வலிகளும்; மூவா இளமை இயைந்தாரும் இல்லை; வளமையில் கேடு இன்றிச் சென்றாரும் இல். | 76 |
| சொல்லான் அறிப, ஒருவனை; மெல்லென்ற நீரான் அறிப, மடுவினை; யார்கண்ணும் ஒப்புரவினான் அறிப, சான்றாண்மை; மெய்க்கண் மகிழான் அறிப, நறா. | 77 |
| நா அன்றோ, நட்பு அறுக்கும்? தேற்றம் இல் பேதை விடும் அன்றோ, வீங்கப் பிணிப்பின்? அவாஅப் படும் அன்றோ, பல் நூல் வலையில்? அடும் அன்றோ, மாறு உள் நிறுக்கும் துணிபு? | 78 |
| கொடுப்பின், அசனம் கொடுக்க! விடுப்பின், உயிர் இடையிட்ட விடுக்க! - எடுப்பின், கிளையுள் அழிந்தார் எடுக்க! கெடுப்பின், வெகுளி கெடுத்துவிடல். | 79 |
| நலனும் இளமையும் நல்குரவின்கீழ்ச் சாம்; குலனும் குடிமையும் கல்லாமைக்கீழ்ச் சாம்; வளம் இல் குளத்தின்கீழ் நெல் சாம்; பரம் அல்லாப் பண்டத்தின்கீழ்ச் சாம், பகுடு. | 80 |
| நல்லார்க்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை; நன்னெறிச் செல்வார்க்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை; அல்லாக் கடைகட்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை; தம் கைத்து உடையார்க்கும் எவ் ஊரும் ஊர். | 81 |
| கல்லா ஒருவர்க்குத் தம் வாயில் சொல் கூற்றம்; மெல் இலை வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம்; அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்; கூற்றமே, இல் இருந்து தீங்கு ஒழுகுவாள். | 82 |
| நீரான் வீறு எய்தும், விளை நிலம்; நீர் வழங்கும் பண்டத்தால் பாடு எய்தும், பட்டினம்; கொண்டு ஆளும் நாட்டான் வீறு எய்துவர், மன்னவர்; கூத்து ஒருவன் பாடலான் பாடு பெறும். | 83 |
| ஒன்று ஊக்கல், பெண்டிர் தொழில் நலம்; என்றும் அறன் ஊக்கல், அந்தணர் உள்ளம்; பிறன் ஆளும் நாடு ஊக்கல், மன்னர் தொழில் நலம்; கேடு ஊக்கல், கேளிர் ஒரீஇவிடல். | 84 |
| கள்ளாமை வேண்டும், கடிய வருதலான்; தள்ளாமை வேண்டும், தகுதி உடையன; நள்ளாமை வேண்டும், சிறியாரோடு; யார்மாட்டும் கொள்ளாமை வேண்டும், பகை. | 85 |
| பெருக்குக, நட்டாரை நன்றின் பால் உய்த்து! தருக்குக, ஒட்டாரைக் காலம் அறிந்தே! அருக்குக, யார்மாட்டும் உண்டி! சுருக்குக, செல்லா இடத்துச் சினம். | 86 |
| மடிமை கெடுவார்கண் நிற்கும்; கொடுமைதான் பேணாமை செய்வார்கண் நிற்குமாம்; பேணிய நாணின் வரை நிற்பர், நற் பெண்டிர்; நட்டு அமைந்த தூணின்கண் நிற்கும், களிறு. | 87 |
| மறை அறிப, அந்தண் புலவர்; முறையொடு வென்றி அறிப அரசர்கள்; என்றும் வணங்கல் அணிகலம் சான்றோர்க்கு; அஃது அன்றி, அணங்கல் வணங்கின்று, பெண். | 88 |
| பட்டாங்கே பட்டு ஒழுகும், பண்பு உடையாள்; காப்பினும், பெட்டாங்கு ஒழுகும், பிணையிலி; முட்டினும், சென்றாங்கே சென்று ஒழுகும், காமம்; கரப்பினும், கொன்றான்மேல் நிற்கும், கொலை. | 89 |
| வன்கண் பெருகின், வலி பெருகும்; பால்மொழியார் இன்கண் பெருகின் இனம்பெருகும்; சீர் சான்ற மென்கண் பெருகின், அறம் பெருகும்; வன்கண் கயம் பெருகின், பாவம் பெரிது. | 90 |
| இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்; வளம் இலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம் கிளைஞர் இல் போழ்தில், சினம் குற்றம்; குற்றம், தமர் அல்லார் கையகத்து ஊண். | 91 |
| எல்லா இடத்தும் கொலை தீது; மக்களைக் கல்லா வளரவிடல் தீது; நல்லார் நலம் தீது, நாண அற்று நிற்பின்; குலம் தீது, கொள்கை அழிந்தக்கடை. | 92 |
| ஆசாரம் என்பது கல்வி; அறம் சேர்ந்த போகம் உடைமை பொருள் ஆட்சி; யார்கண்ணும் கண்ணோட்டம் இன்மை முறைமை; தெரிந்து ஆள்வான் உள் நாட்டம் இன்மையும் இல். | 93 |
| கள்ளின் இடும்பை களி அறியும்; நீர் இடும்பை புள்ளினுள் ஓங்கல் அறியும்; நிரப்பு இடும்பை பல் பெண்டிராளன் அறியும்; கரப்பு இடும்பை கள்வன் அறிந்துவிடும். | 94 |
| வடுச் சொல் நயம் இல்லார் வாய்த் தோன்றும்; கற்றார் வாய்ச் சாயினும் தோன்றா, கரப்புச் சொல்; தீய பரப்புச் சொல் சான்றார்வாய்த் தோன்றா; கரப்புச் சொல் கீழ்கள் வாய்த் தோன்றிவிடும். | 95 |
| வாலிழையார் முன்னர் வனப்பு இலார் பாடு இலன்; சாலும் அவைப்படின், கல்லாதான் பாடு இலன்; கற்றான் ஒருவனும் பாடு இலனே, கல்லாதார், பேதையார், முன்னர்ப்படின். | 96 |
| மாசு படினும், மணி தன் சீர் குன்றாதாம்; பூசுக் கொளினும், இரும்பின்கண் மாசு ஒட்டும்; பாசத்துள் இட்டு, விளக்கினும், கீழ் தன்னை மாசுடைமை காட்டிவிடும். | 97 |
| எண் ஒக்கும், சான்றோர் மரீஇயாரின் தீராமை; புண் ஒக்கும், போற்றார் உடனுறைவு; பண்ணிய யாழ் ஒக்கும், நாட்டார் கழறும் சொல்; பாழ் ஒக்கும், பண்பு உடையாள் இல்லா மனை. | 98 |
| ஏரி சிறிதுஆயின், நீர் ஊரும்; இல்லத்து வாரி சிறிதுஆயின், பெண் ஊரும்; மேலைத் தவம் சிறிதுஆயின், வினை ஊரும்; ஊரும், உரன் சிறிதுஆயின், பகை. | 99 |
| அலைப்பான், பிறது உயிரை ஆக்கலும் குற்றம்; விலைப்பாலின் கொண்டு, ஊன் மிசைதலும் குற்றம்; சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்; கொலைப்பாலும் குற்றமே ஆம். | 100 |
| மனைக்கு விளக்கம் மடவாள்; மடவாள்- தனக்குத் தகை சால் புதல்வர்; மனக்கு இனிய காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும், ஓதின், புகழ் சால் உணர்வு. | 101 |
மிகைப் பாடல்கள்
| வைததனால் ஆகும் வசையே வணக்கமது செய்ததனால் ஆகும் செழுங்கிளை - செய்த பொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த அருளினால் ஆகும் அறம். | 1 |
| ஒருவன் அறிவானும் எல்லாம் யாதொன்றும் ஒருவன் அறியா தவனும் - ஒருவன் குணனடங்கக் குற்றமுள் ளானும் ஒருவன் கணனடங்கக் கற்றானும் இல். | 2 |
| இன்சொலான் ஆகும் கிழமை இனிப்பிலா வன்சொலான் ஆகும் வசைமனம் - மென்சொலின் நாவினான் ஆகும் அருண்மனம் அம்மனத்தான் வீவிலா வீடாய் விடும். | 3 |
| முனியார், அரிய முயல்வார்; அவரின் முனியார், அறம் காமுறுவார்; இனிய இரங்கார், இசைவேண்டும் ஆடவர்; அன்பிற்கு உயங்கார், அறிவுஉடையார். | 4 |
நான்மணிக்கடிகை முற்றும்.
No comments:
Post a Comment