எந்த ரூபத்தில் மனிதனுக்கு நல்லது செய்தாலும் அவர்கவுளே.
பெரியார் சொல்வது…
‘நான் சொல்லுவதை நம்பு, இல்லாவிட்டால் பாவம்!’ என்று
நான் சொல்லவில்லை. எதிலும் உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் நம்
நாடு முன்னேற்றமடையுமேயன்றி, ‘என்னுடைய பாட்டன், முப்பாட்டன்
போன வழியில்தான் போகிறேன்’ என்ற மூடக்கொள்கையினால், நாடு
நாளுக்கு நாள் நாசமடைவது திண்ணம்..(குடிஅரசு
28.05.1949)
மதம் என்பது?
‘நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள்! நான் சொல்லுவது கடவுள் வாக்கு;
நம்பாவிட்டால் நரகம் வரும்; நாத்திகர்கள்
ஆகிவிடுவீர்கள்’ என்ற வேதம், சாஸ்திரம், புராணம்போல நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை. நான் சொல்வது,
‘உங்கள் அறிவு, ஆராய்ச்சி,
புத்தி, அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள்;
ஒத்துவந்தால் காரியத்தில் கொஞ்சமாவது செய்ய முற்படுங்கள்.
நான் எந்த மதக்காரனுக்காவது ஏஜண்டு அல்ல; அல்லது
நானும் எந்த மதக்காரனுக்காவது அடிமையும் அல்ல. அன்பு, அறிவு
என்கிற இரண்டு தத்துவங்களுக்கு மாத்திரம் ஆட்பட்டவன். ஆதலால்,
எனக்குப் பட்டதை உங்கள் முன் சொல்லுவதில் எனக்கு ஒரு கடமையும்
ஆசையும் மகிழ்ச்சியும் இருப்பதால் சொல்லுகிறேன்.
மதம்
என்பது நாட்டிற்கோ ஒரு சமூகத்திற்கோ ஒரு தனி மனிதனுக்கோ எதற்காக இருக்க வேண்டியது?
ஒரு தேசத்தையோ சமூகத்தையோ கட்டுப்படுத்தி,
ஒற்றுமைப்படுத்துவதற்காகவா? பிரித்து
வைப்பதற்காகவா? அது ஒரு மனிதனின் மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்டதா?
அல்லது, ஒரு மனிதனின் மனச்சாட்சியைக் கட்டுப்படுத்தக் கூடியதா?
மனிதனுக்காக மதமா? மதத்துக்காக
மனிதனா? என்பவைகளைத் தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.
(குடிஅரசு - 11.09.1927)
(குடிஅரசு - 11.09.1927)
என்ன வெங்காய மொழி?
நம் கடவுள் சாதி காப்பாற்றும் கடவுள்,
நம் மதம் சாதி காப்பாற்றும் மதம், நம்
அரசாங்கம் - சாதி காப்பாற்றும் அரசாங்கம், நம்
இலக்கியம் - சாதி காப்பாற்றும் இலக்கியம், நம்
மொழி - சாதி காப்பாற்றும் மொழி,
இதை உயர்ந்த மொழி என்கிறார்கள். என்ன வெங்காய மொழி?
இரண்டாயிரம் வருடங்களாக இருக்கும் தமிழ்மொழி சாதியை ஒழிக்க என்ன
செய்தது? மொழி மீது என்ன இருக்கிறது? ஏதோ
மொழி மீது நம்முடைய பற்று; விவரம் தெரியாமல் சிலருக்குப் பற்று. எந்த இலக்கியம் சாதியை
ஒழிக்கிறது? (சென்னையில் சொற்பொழிவு 16.09.1961)
சுகம்
அனுபவிக்க வெட்கப்படுகிறேன்
இரயில் பிரயாணம் செய்யும்பொழுது மூன்றாம் வகுப்பில்தான் செல்வேன்.
அப்படி யாராவது வலுக்கட்டாயம் செய்து முதலாவது, இரண்டாவது
வகுப்பு வண்டிகளில் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார்களானால் நான் அவர்களிடம்
சரி என்று சொல்லிவிட்டு முதலாவது அல்லது இரண்டாவது வகுப்புக்கு உள்ள பிரயாணச்
சீட்டின் கட்டணத்தை வாங்கிக்கொள்வேன். ஆனால், பிரயாணச்
சீட்டு வாங்கும்பொழுது மூன்றாவது வகுப்புக்கு வாங்கிக்கொண்டு மீதி உண்டாகும்
தொகையைப் பத்திரமாக முடிபோட்டு வைத்துக்கொள்வேன். (வேன் வழங்கியபோது 24.12.1955)
வெங்காயம்
எப்போதுமே நான் கடவுளையும் மதத்தையும் அவை சம்பந்தப்பட்டவை
எவற்றையுமே ‘வெங்காயம்’ என்றுதான் சொல்லுவேன். வெங்காயம் என்றால் வித்து இல்லாதது;
வெறும் சதை. அச்சொல்லின் பொருள் வெங்காயம் வெறும் காயம்;
உயிரற்ற உடல் - விதை இல்லாதது; உரிக்க
உரிக்கத் தோலாகவே சதையாகவே வந்து முடிவில் சூனியமாய் விதை இல்லாத தன்மையதாய்
முடிவது என்பது பொருள்.
30 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இந்தக் கடவுள்,
மத உணர்ச்சி இருந்தாலும் 24 அல்லது
30 வயதுக்கு உட்பட்ட மக்களிடம் கண்டிப்பாக இந்த உணர்ச்சி இருக்கவே
கூடாது என்பது என் ஆசை. அப்படி, இந்தக்
கடவுள் மத உணர்ச்சி இல்லாமல் இருந்தால்தான் மனிதப் பண்பு, மக்கள்
யாவரையும் ஒன்றுபோல் கருதும் உணர்ச்சி, நேர்மை, நல்லதைப்
போற்றவும் தீயதைக் கண்டிக்கவுமான துணிவு, யாவரையும்
ஒன்றுபோல் கருதிச் செய்யும் பொதுத்தொண்டு உணர்ச்சியும் ஏற்பட முடியும். இன்று இவை
சுத்த சுத்தமாய் இல்லாததற்குக் காரணம், இந்தக்
கடவுள், மதம், மனிதத்தன்மைக்கு மேற்பட்ட தன்மையுள்ள மனிதப்பிறப்பு என்கிற
உணர்ச்சிதான் என்பது எனது தாழ்மையான முடிந்த முடிவு.
விதவைகள் நிலை!
விதவைகளுக்கு விவாகம் செய்யலாமா என்பதற்கும் சாஸ்திரத்திற்கும்
என்ன சம்பந்தம் என்பது எனக்கு விளங்கவில்லை. ஒரு சமயம்,
விவாகம் எந்த மாதிரி செய்வது என்பதுபற்றி யோசிப்பது என்றாலும்
சமாதானம் சொல்லலாம். அப்படிக்கின்றி, விவாகம்
செய்யலாமா, வேண்டாமா என்பதற்கே சமாதானம் சொல்லுவதென்றால்,
அது சுத்த முட்டாள்தனமென்று தோன்றவில்லையா?
சாஸ்திரத்தில் இடம் இருந்தால் என்ன? இல்லாவிட்டல்
என்ன? சாதியில் வழக்கம் இருந்தால் என்ன? இல்லாவிட்டால்
என்ன? அதைப் பற்றிக் கவனிப்பதில் பலன் என்ன?
புருஷனை இழந்த பெண்ணுக்குப் புருஷ இச்சை இருக்குமா,
இருக்காதா? அவளுக்குப் புருஷன் வேண்டுமா வேண்டாமா என்பதைத் தானே கவனித்து
முடிவுகட்ட வேண்டும்? அமாவாசையில் பிறந்த பிள்ளை திருடும் என்று ஜோசியத்திலிருந்து
விட்டால், அந்தப் பிள்ளை திருடின திருட்டையெல்லாம் ஜோசியம் நம்புகிறவன்
சும்மா விட்டுவிடுவானா என்று கேட்கிறேன்?
எந்தக் காலத்திலோ, எங்கிருந்தோ,
யாராலோ, எதற்காகவோ, யாருக்கோ எழுதிய ஒரு புத்தகத்தை இந்தக் காலத்திற்கு,
இந்த இடத்திற்கு, நமது
நன்மைக்காக, நமது நன்மையில் கவலை கொண்டவர்களால் எழுதப்பட்டதென்றும் அதன்படி
நடந்து தீர வேண்டும் என்றும் கருதுகின்றவன் மனிதனல்லன் என்பதுதான் எனது மாற்ற
முடியாத உறுதியான அபிப்பிராயம் ஆகும். (குடிஅரசு - 27.10.1929)
No comments:
Post a Comment